அட்சய திருதியை
ஆதிபகவன்
நிகழ்க்கால சமணத் தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராக திகழ்பவர் ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிஷபதேவராவார்.
இப்பரத கண்டத்தின் முதல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவரும் இவரே ஆவார். இவர் காலத்தில் தான் போகபூமி, கருமபூமியாக
மாறியது. போக காலத்தில் மக்கள் உழைப்பு ஏதுமின்றி, கற்பக
மரத்தை நாடி வேண்டியதைப் பெற்று வாழலானார்கள்.
கர்ம பூமி
இவ்வாறாக மக்கள் எந்த உழைப்புமின்றி வாழ்ந்தக் காலத்தில் கற்பக மரங்கள் மறையத் தொடங்கின. இதனால், மக்கள் செய்வதறியாது, தங்களின் அரசனான ஆதிபகவனை அணுகி, தங்களுக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டனர். பகவானும் அவர்கள் நிலையுணர்ந்து ஆறு தொழில்களை கற்பித்தார். இதனால், அவர் யுகாதி நாதர் என்று அழைக்கப்படலானார். ஆறு தொழிற்களை கற்பித்த அந்த நன்னாள் யுகாதி என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
இந்நாட்டில் தோன்றிய எல்லா சமண இலக்கியங்களிலும் இச்செய்தியைக் காணலாம். தமிழில் தோன்றிய சமண இலக்கியங்களும் இதனை கூறுகின்றன. சீவக சிந்தாமணி, சூடாமணி நிகண்டு, திருக்கலம்பகம், ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் போன்ற நூட்களில் இச்செய்தி வருவதைக் காணலாம்.
விரிவஞ்சி, எடுத்துக்காட்டாக ஒன்றை ஈண்டு சுட்டுகிறேன்.
“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
     உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
     பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
     உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
     அடியோஞ் சிற்றலழி யேலே!
                                                                 - ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்
துறவறம்
இவ்வாறாக உலக மக்களுக்கு முதன்முதல் ஆறு தொழில்களைக் கற்பித்ததால், இவருக்கு ஆதிபிரம்மா, யுகாதிநாதன், பிரஜாபதி, ஆதிதேவன், ஆதிநாதர், ஆதிராஜர், ஆதிபகவன், ஆதிசக்கரவர்த்தி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படலானார்.
குறளாசிரியர் தேவர் பெருமானும், இதனைக் குறிக்கவே முதல் குறளாக,
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு”
என்ற குறளினை அமைத்தமை இங்கு சிந்திதற்பாலது.
இல்லறத்தில் இன்பம் துய்த்து, சிறப்புற அரசாட்சி செய்து
வருங்கால், ஒரு நாள் அரண்மனையில், “நீலாஞ்சனை” என்னும் நாட்டிய பெண்ணின் நாட்டியம் அரங்கேற்றப்படுகிறது. அரங்கேற்றத்தின் பாதியிலேயே அப்பெண் அகால மரணம் அடைகிறாள். இதனால் அதிர்ச்சியுற்ற ஆதிராசருக்கு அக்கணமே
வைராக்கியம் ஏற்படுகிறது. தன் முதல் மகனான பரதனிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு, அரச வாழ்வைத் துறந்து துறவேற்கிறார்.
ஆகார தானம்
அவ்வாறு அரச வாழ்வைத் துறந்த விருஷபதேவர், நாட்டை விட்டு அகன்று காட்டில் வாழலானார். மெளனம் ஏற்றார். தொடர்ந்து ஆறு மாதங்கள் நின்ற வண்ணமே (கயோத்சர்கம்) தவம் ஏற்றலானார். ஆறு மாதங்கள் கழிந்தப் பிறகு ஆகாரம்
ஏற்க (பாராணை விதி) நாட்டுக்கு வருகிறார். மக்கள், இதற்கு முன்னர் துறவியர்களைக் கண்டதில்லையாதலால், ரிஷபநாதரை
இன்னும் அரசராகவே கருதி அவருக்கு தங்களிடம் உள்ள
விலை உயர்ந்த பொருட்களை அளிக்க முன்வந்தனர். இதனால்,
மீண்டும் தவத்தினைத் தொடரலானார். இவ்வாறாக மேலும் ஆறு மாதங்கள் கழியலாயின.
தான தீர்த்தங்கரர்
இங்கு ஒன்றைக் குறிப்பது நல்லது என்று நினைக்கிறேன். அதாவது, சமண துறவிகள் பாராணை செல்லும்போது எந்த இல்லறத்தான் வீட்டின் முன்பும் நிற்க மாட்டார்கள். அதுபோல் யாரிடமும் பேசவும் மாட்டார்கள். அவர்கள் தங்கள் வழியேச் செல்வார்கள். அத்துறவிகளைக் கண்ட இல்லறத்தான் தானே முன்வந்து அவர்களுக்கு ஆகாரத் தானம் கொடுக்க வேண்டுமேயன்றி துறவிகள் தாமாக யாரிடமும் சென்று உண்ண கூடாது என்பது சமணத் துறவிகளின் விதி. ஆகாரம் ஏற்கும்போது, நின்று கொண்டு தன் இருகைகளால்தான் உணவு ஏற்கவேண்டும். பாத்திரம் ஏதும் உபயோகப்படுத்தக் கூடாது.
அவ்விதியின்படி, மீண்டும் பாராணை ஏற்க அஸ்தினாபுரம்  வருகிறார் விருடபதேவர். அச்சமயம், அந்நாட்டின் இளவரசனான, சிரேயாம்ச குமாரனுக்கு தான் முற்பிறவியில் துறவிகளுக்கு ஆகார தானம் கொடுத்த நினைவு ஏற்பட்டு, பாராணைக்காக வந்த விருஷபசுவாமிக்கு “கரும்பு சாற்றினை” அளிக்கிறான். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். இளவரசன் சிரேயாம்ச குமாரன் பகவானுக்கு ஆகார தானம் அளித்ததால் “தான தீர்த்தங்கரர்” எனப் போற்றப்பட்டார்.
தான பூஜை
ஆதிபகவன் பாராணை மேற்கொண்டதை தன் அவதி ஞானத்தால் அறிந்த தேவேந்திரனும், இதர தேவர்களும் பெருமகிழ்ச்சியடைந்து, பஞ்சாச்சரியம் பொழிந்தனர். அப்பொழுது விழுந்த விலையுயர்ந்த இரத்தின, மாணிக்க கற்களை, மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். சிரேயாம்ச குமாரன் ஆகாரதானம் அளித்த அந்த நன்நாளே அட்சய திருதியாகவும் ஆகாரதானம் போற்றும் நாளாகவும் போற்றப்படுகிறது.
அட்சயதிருதியை
அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன “விருந்தோம்பலை”க் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.
தானம் போற்றுவோம்
பண்டிகைகளின் உண்மையான நோக்கத்தை அறிந்து, ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும். அப்படி முடியாதவர்கள் ஏழை சிறுவர்களுக்கு கரும்புச் சாற்றினையாவது கொடுத்து "அட்சயதிருதியை" கொண்டாடுங்கள்.
                                                                       - இரா. பானுகுமார், சென்னை